logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Peruncollakarati Tokuti-6

Please click here to read PDF file Peruncollakarati Tokuti-6

கா¹
க் என்ற மெய்யெழுத்தும் ‘ஆ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய்யெழுத்து, க் +ஆ= கா.

கா² பெ.
1. பாதுகாப்பு. கழற்கானாய் நின்றேனைக்கா (திரிவரங்.கலம்.105,4). கா என வணங்கி ஏத்துவேன் (கொளஞ்.பிள்.4). கதி கா விரிய வினையாவு நீங்கி (திரிவேரக.யமகஅந்.73).
2. அரண். ஏப் பிழைத்து காக்கொள்ளுமாறு (பழமொழி 354).
3. சோலை. கடிமரந்துளங்கிய காவும் (புறநா.23, 9). கடிகாவின் நிலை தொலைச்சி (மதுரைக்.153). கா எரியூட்டிய நாள்போல் (சிலப். 22,112). செய்குன்றும் இளமரக் காவும் பூம்பந்தரும் (இறை.அகப்.115,16). வாவியொடு காவினிடை மாந்தர்பதிகொண்டார் (சீவத.1781). பூம்பொழிற் காக்களாவனகற்பகச் சோலைகள் (சூளா.129). காவின் புறம்படர் வல்லிகண்டே கண்களி கொண்டதே (அம்பி.கோவை 2). சுரபுன்னைக் காவினிடை மேவி (மதுரைச்.உலா 200). கா அருகே சேர்ந்து அவரும் ஏகலுடன் தோழர்எலாம் இனிதிருந்தார் (சீவே.சரி.2386). மானே உனைத்தேடிக் காவின் வழியே வந்தேன் (சிந்.இலக்.2,5.)
4. கற்பக மரம். பொற் பூங்காவிற் சேர்ந்தவர் கூட்டுண (செ.பாகவத.4,3,1007). கா அனைய கைத்திரனால் ... முடிபுடைத்தனன் (சிவராத்.பு.6,66). காவாய்ப் பயந்த தடக்கை மலர்க் கழறிற்றறிவார் (நால்வர்நான். மாலை 31). கா நிகரும் ஜங்கை நாதினை உவந்து (கொளஞ்.பிள்.4). கா என்று எண்ணும் கரித்து (அரிச்.பு.1,208). காமன் நத்தால் விழ ஊதி அக்காவைக் கவர் அரங்கன் (திருவரங். அந்.76). போக்கியம் கா உம்பர் வாய் விண்ட தேசியற் (பச்சை.அம்.பிள்.அம்புலிப்.2,2).

கா³ பெ.
1. காவடித்தண்டு. காமமு நாணு முயிர் காவாத் தூங்கும் (குறள். 1163). இவர்தரு மெல்லிலைக் காவும் ஏந்திய (சீவத.826). சுமக்கும் தா வைத்து தூசொடு வாய் புதைத்து(அரிச்.பு.7,52). துணியாதவரே இருதலையும் காக் கழிப்பார் (பழமொழி 208). மணிக் குடக்காவைத் தரையிடை யிருத்தி நிற்றல் (சோண.மாலை 39). தந்தை தாயரைக் காவில் காவி (காந்தி காதை 4,76).
2. துலாக்கோல். (யாழ். அக.)
3.1. ஒருநிறையளவு. காவென் நிறையும் (தொல். எழுத். 169). விதானத்திற் பொன்பத்துக் காவும் (மூவரை. தூது 218). 3.2. தோள் சுமை. (வட. நி. 477).
4. பூ முதலியன இடும் பெட்டி. இவர்தரு மெல்லிலைக் காவும் (சீவக. 826).

கா^4 பெ.
1. சரசுவதி. காவெனப் பெயரிய கலைமகளை (சிவஞா.காஞ்சிப்பு.வீராட்ட.45).
2. பிரமன். அளவு படாப்பேரின்பம் காவென்ப அஞ்சி யென் பதடைதலாமே (ஆளவந்.காஞ்சிப்பு.749)

கா^5 பெ.
பாரிசாதம். பால்தரும் காவும் இன்பால் (செழிய.கோவை 23).

கா^6 பெ.
1. அழகு. காமரு சாயலான் கேள்வன் (புற. வெண்.216).
2. வலிமை. கா மாலிடம் (சமுத்திரவி.21).

கா^7 பெ.
வருத்தம். (யாழ்.அக.)

கா^8 -த்தல் 11வி.
1.பாதுகாத்தல். புலி புறங் காக்கும் குருணை போல (புறநா.42,10). நல்லொழுக்கம் காக்கும் திருவொத்தவர் (நாலடி.57). தன்மண் காத்தன்று (மணிமே.23,17). சொற்பகர்ந் துலகங் காக்கும் (சூளா.67). விரிநீருலகங் காப்பான் (திருக்கோவை 312). மறங்கடிந்து அரசர் போற்ற வையகங் காக்கும் நாளில் (பெரயபு.1,3,17). யான்படைத்துக் காத்துத் துடைக்கவும் வல்லனாவேன் (கிருவிளை.பு. 57, 50). படுதிரை வையம் காக்கும் (செ.பாகவத.62). எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே (தாயுமா.பா. 43,14). கண்ணை இமை இரண்டும் காப்பது போல் (பாரதி கண்ணன்.4,46).
2. காவல் செய்தல். கொடிச்சி காக்கும் பெருங்குரல் (ஐங்.296). சிறை காக்குங் காப்பு எவன்செய்யும்(குறள்.57). சாரல் தினை காத்திருந்தேம் யாம் (ஐந்.ஐம்.14). காப்பினும் பெட்டாங்கு ஒழுகும் பிணை இலி(நான்மணிக்.92). பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி (சூளா.102). கூர் வளைவாய்ப் புள்ளின் தவமுடியப் புனமே இவள் காத்தது(அம்பி. கோவை 94). ஊரைக் காக்கும் என்பது காக்கப்படும் பொருள் மேல் வந்தது (கொல். சொல்.7- தெய்வச்.). வியன் மலை விடலை விழுப்புண் காப்பவும் (இலக்.வி.615).
3. தடுத்தல். செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள்.301). காக்கை கைத்தடி கொண்டு காத்தும் (சூளா.1851). நீ அன்று காத்தது இயம்புகவே (இயற். இரண்டாம் திருவந்.10). கணம் ஏயும் காத்தல் அரிது (குறள்.29 மணக்.). கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர் (கம்பரா.1,8,40). ஆர்அது காக்க வல்லார் (சிவராத்.பு.4,84)
4. பின்பற்றுதல். ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கங் காத்தல் (சீவக.1547). விரதங் காத்தலுமாகிய பிரமசரிய ஒழுக்கத்தானும் (குறள். 41 பரிமே.). காப்பது விரதம் (ஆத்தி.33). அவன் நோன்பு காத்தான் (நாட்.வ.).
5. எதிர்பார்த்தல். அவனுக்காகக் காத்திருந்தான் (முன்).
6. தீமை வரவொட்டாமல் தடுத்தல். கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர் (கம்பரா. வேள்வி.41).
7. ஒழித்தல்.கனற்றுபு காத்தி வரவு (பரிபா.6,86).
8. பொறுத்தல். நங்கள் போல்வார் அற்றங்கள் காப்பா ரறிவிற் பெறியார்க ளன்றே (சூளா.3).

கா^9 -த்தல் 11 வி
எதிர்பார்த்தல். அவனுக்காகக் காத்திருந்தான் (நட்.வ.).

கா^10 இ. சொ. ஓர் அசைச்சொல்.
யா கா பிற பிறக்கு (தொல்.சொல்.279.சேனா.). யாகாபிற பிறக்கு அரோ போ மாது என வருமொரு வேழும் அசைநிலை மொழியே (முத்துவீ.667). எங்ஙகா போறீங்க எங்கே (நாட்.வ.).


logo