பெ. 1. தமிழ் நெடுங்கணக்கின் முதல் உயிரெழுத்து. எழுத்தெனப்படுப அகர முதல் (தொல். எழுத். 1 இளம். ). 2. (ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் ) உயிர்க்குறில். அ இ உ எ ஒ ஓரள பிசைக்கும் குற்றெழுத்தென்ப (தொல் . எழுத். 3 இளம்.) 3. தமிழில் மொழி முதலில் வாராத, ரகரத்தில் தொடங்குகிற பிற மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்பதற்கு அச்சொற்களின் முன்சேர்க்கப் பெறும் எழுத்து. அரம்பை (பெருங். 5,3,59). அரதன வருணம், கதி, உண்டி, பால், தானம், கன்னல் (பொழுது), புள், நாள் ஆகிய செய்யுட் பொருத்தங்களுள் கூறப்படும ஓர் எழுத்து. (பன்னிருபா. எழுத். 5, 52).
அ2
பெ. அழகு. பித்திகத்து அவ் விதழ் (நெடுநல். 40-41 பிச்சியினுடைய ....அரும்பினது அழகி இதழ்கள் - நச்.) அவ் விசும்பு (கலித். 92, 16) அந்நுண் மருங்குல் (மணிமே. 3,121). பத்தர் அன்ன மெத்தென் அவ்வயிற்று (பெருங். 1, 40, 270). அக் கோலங்காட்டி அளித்த என் ஆவியை (கலைசைக். 37. உ. வே. சா. அடிக் குறிப்பு).
அ3
பெ. 1. சிவன் . ஆரும் அறியார் அகாரம் அவன் என்று (திருமந். 1751). 2. திருமால், அக்கரங்களில் அகாரம் நான் (பகவற். 10,21). அவ் வானவருக்கு மவ் வானவ ரெல்லாம் உவ் வானவர் அடிமையென்று (பிரமேய. 1). 3. பிரமன். அ என்றது பிரமாவின் பெயருமாம் (தக்க. 65. ப. உரை.)
பெ . 1. எட்டு என்னும் எண்ணின் தமிழ்க் குறியீடு. அ உ அறியா அறிவுஇல் இடை மகனே (யாப். வி. 7 உரை). 2. (சமயம்) ஆகாயத்திற்கான குறியீடு பார் புனல். ..அனல்...கால்....வான்....எழுத்து ல வ ர ய அ (உண்மை வி. 5). 3. (சோதிடம் ) பஞ்சபட்சிகளுள் முதல் பறவையான வல்லூற்றைக் குறிக்கும் எழுத்து. (பெரியவரு. ப. 101) 4. (சித்த மருத்.) சுக்கு. (பரி. அக. / செ. ப. அக. அனு. ) 5. (சித்த மருத்.) திப்பிலி. (முன்.)
அ6
இ. சொ. 1. சேய்மைப் பொருள், இடம், காலம், முதலியன உணர்த்தும் சுட்டு. அம் மலைகிழவோற்கு உரைமதி இம் மலை....மகள்...காவல் ஆயினள் எனவே (நற். 102,7-9). அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்றுய்ந்தது (பெரியாழ். திருப்பல்.10). அவ்வழி இமையவர் அறிந்து கூடினார் (கம்பரா. 2,13,130) அகரம் தூரப் பொருளையும் இகரம் சமீபப் பொருளையும் உகரம் எதிர்முகமின்றிப் பின்னிற்கும் பொருளையும் சுட்டும்.... (நன். 11 இராமானுச.) 1. சொல்லினகத்து முதனிலை யுறுப்பாய் அமைந்து நிற்கும் சுட்டு (அகச்சுட்டு). அவன் இவன் உவன் (தொல். சொல்.159 இளம்.). அவனென்பதன்கண் அகரம் அறமென்பதன் கண் அகரம்போல.... அகத்து வரும் (நன்.66 சங்கர நமச்.). 2. சொல்லின் புறம்பாய் அமைந்து நிற்கும் சுட்டு (புறச்சுட்டு). அப் பண்பினவே (தொல். சொல்.245 இளம்.). அவ் வெண்ணிலவின் (புறநா. 112, 1). அக் கொற்றன் (தொல். எழுத். 31. நச்.) மொழிக்குப் புறத்தும் அகத்து....சுட்டுப் பொருளுணர்த்தவரின் (அ) சுட்டெழுத்தாம் (நன். 66 சங்கரநமச்.). 3. முற்கூறிய பொருளை மீண்டும் உரைக்கப் பயனாகும் சுட்டு, அந்த. பீலிபெய்சாகாடும் அச்சிறும் அப் பண்டம்.... (குறள். 475). 4. உலகத்தார் அறிந்த பொருளோடு வரும் சுட்டு (உலகறிசுட்டு). அத்தம் பெருமான் (சீவக, 221 அ உலகறி பொருண்மேற்று - நச். ). 5. பண்டு நிகழ்ந்ததனை இன்று அறிவிக்கும் சுட்டு (பண்டறி சுட்டு.) அம் மணிவரை (சீவக. 1445 அகரம் பண்டறிசுட்டாக்கி - நச்.). நின்றான் அந் நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் (கம்பரா. 6, 36,133).
அ7
இ. சொ. 1. ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு. களிறு அவர காப்புடைய கயம் படியினை (புறநா. 15,9-10). மாக்கடுங் கோக்காயினும் சொல்லவே வேண்டும் நம் குறை (முத்தொள். 128). பாம்பறியும் பாம்பின கால் (பழமொ. நா. 5). நம்ம வினைகள் அல்கி அழிந்திட (தேவா. 7, 81, 3). சாத்தன ஆடை (தொல். சொல். 80 நச்.). பன்மை உணர்த்தும் அகர உருபுங் கொள்க...சாத்தன குழைகள் (தொல். சொல். 77 தெய்வச்). நாவிமானமணம்: அ என்பது ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு (தக்க. 34 ப. உரை). 2. பலவின்பாற் பெயர் விகுதி. அவ்வும் சுட்டிறு வவ்வும்...பலவின் பெயராகும்மே (நன். 280). பல, சில...வருவ-இவை பெயர் (தொல். சொல்.9 தெய்வச்.). 3. பலவின் பால் (தெரிநிலை, குறிப்பு) வினை முற்று விகுதி. அ ஆ வ ... பலவற்றுப் படர்க்கை (தொல். சொல். 212 இனம்.). துஞ்சாக் கண்ண வட புலத்தரசே (புறநா. 31, 17). புனல் தூவத் தூமலர்க் கண்கள் அமைந்தன (பரிபா. 7, 52-53). பந்துகள் வெண்மையும் செம்மையும் கருமையும் உடையன (பெருங். 4, 12, 49-51). 4. ஒரு (தெரிநிலை, குறிப்புப்) பெயரெச்சவிகுதி. நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர் (அகநா. 104, 6). சிறு பசுங் கால ...குருகும் (குறுந். 25). அமிழ்தின் வந்த தேவியை (கம்பரா. 4, 7, 86). சுருதிமார்க்கம் பிழையாத கொற்கைகிழான் (வேள்விக். சாச. தமிழ். செய். 5-6). புழுதி நிறைந்த பூமி எனக்குப் பழுதிலாத பஞ்சணையாகும் (ஆசிய. 5, 66-67). 5. (செய என்னும் வாய்பாட்டு) வினையெச்சவிகுதி. கண்ணிற்காண நண்ணுவழி இரீஇ (பொருத. 76). மோப்பக் குழையும் அனிச்சம் (குறள். 90). திசை நடுங்க... வெளிப்பட்டு (வேள்விக். சாச. தமிழ். செய். 33). அலைந்து திரிய எண்ணுகின்றனையோ (ஆசிய. 5, 23-24). 6. ஒரு வியங்கோள் விகுதி. இருகாது அவனைக் கேட்க, வாய் பண்ணவனைப் பாட (புற. வெண், கடவுள். 2). அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க (கந்தபு. பாயிரம் 5). வையம் இன்புற... சிவாலயம் பீடுற (செவ்வந்திப்பு. 11, 51). 7. ஒரு தொழிற்பெயர் விகுதி. கண் பாயல் கொண்டு இயைபவால் (கலித். 70, 8 இயைப, அகர வீற்றுத் தொழிற்பெயர் - நச்.). 8. (வினைப்பெயரல்லாத) பெயர்ப் பகுபதங்களுக்கிடையில் வரும் ஓர் இடைச்சொல். வானவன் மீனவன் ... பெரியவன் என்றற் றொடக்கத்தன அ என்னும் இடைநிலை பெற்றன (நன். 140 மயிலை.). 9. ஒரு சாரியை. அன் ... அ ... பிறவும் பொதுச் சாரியையே (நன். 244). தமிழ் அவ்வுறவும் (நன். 225 தமிழ் என்னுஞ் சொல் ... வேற்றுமைக்கண் அகரச் சாரியையைப்... பெறும்-சங்கரநமச்.). தமிழ நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் (பெரியதி. தனியன்). 10. ஓர் அசை, மன்றல மாலை (சீவக. 2289 மன்றல-அ அசை - நச்.). 11. ஒரு செய்யுள் விகாரம். (பதிற்றுப். 74. 9 கவலைய என்னும் அசரம் செய்யுன் விகாரம் ப. உரை). 12. ஓர் எழுத்துப்பேறு. (தொல். எழுத். 115 நினவ கூறுவல் எனவ கேண்மதி என்றாற்போல ஆறாவதற்குரிய அகர உருபின் முன்னரும் ஓர்அகர எழுத்துப்பேறு - நச்.).
அ8
இ. சொ. இன்மை, மறுதலை, அன்மைப் பொருளில் வரும் வடமொழி முன்னொட்டு, உபசர்க்கம். அ ... அப்பிரகாசமென ... இன்மையினையும் அதன்மம் என ... மறுதலையினையும், அப்பிராமணன் என ... அன்மையினையும் உணர்த்தி நிற்கும் (சி. பொ. பா. 2, 1).
அஆ
இ. சொ. இரக்கத்தைத் தெரிவிக்கும் குறிப்புச் சொல். வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அஆ இழந்தான் என்று எண்ணப்படும் (நாலடி. 9). செத்தார் கெட்டேன் அஆ ... என (திருப்பு. 588).